செந்தமிழ்சிற்பிகள்

விபுலானந்த அடிகள் (1892-1947)

விபுலானந்த அடிகள் (1892-1947)

அறிமுகம் 

சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 – சூலை 19, 1947) கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்

சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 1892 மார்ச்சு 27 (1892 கர ஆண்டு பங்குனி 16) அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார்

இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார்.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912-ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915-ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916-இல் அறிவியலில் பட்டயத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே.

செட்டி நாட்டரசர் வேண்டுகோளின்படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்துப் போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934-ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேசுவரர் கோயிலில் திருஞானசம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947-ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.

வெளிவந்த நூல்கள்

மதங்க சூளாமணி

யாழ்நூல்

சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் (127 கட்டுரைகளின் தொகுப்பு, 3 பாகங்கள், 1997)

விபுலானந்தர் இலக்கியம் (தொகுப்பு)